ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது ஒரு ஆட்டை அழைத்து, “என் வாய் நாற்றமடிக்கிறதா என்று பார்த்துச் சொல்” என்று கேட்டது. ஆடு தயக்கமின்றி சிங்கத்தின் வாயை முகர்ந்து பார்த்து, “ஆமாம், நாற்றமடிக்கிறது” என்று நேர்மையாகப் பதிலளித்தது. உடனே சிங்கம் கோபமடைந்து, “முட்டாளே! உனக்கு எவ்வளவு திமிர்!” என்று சொல்லி அதன்மேல் பாய்ந்து அதை கொன்று விட்டது.
அதற்குப் பிறகு சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து அதே கேள்வியை கேட்டது. ஓநாய் சிங்கத்தின் வாயை முகர்ந்து பார்த்துவிட்டு, “எந்த நாற்றமும் இல்லை” என்று பொய்யாகச் சொன்னது. உடனே சிங்கம், “மூடனே! பொய்யாகப் பேசுகிறாயா?” என்று கூறி அதையும் கொன்று விட்டது.
பின்னர் சிங்கம் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியை கேட்டது. நரி சற்று யோசித்து, “அரசே, கடந்த சில நாட்களாக எனக்கு கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு எந்த வாசனையும் உணர முடியவில்லை” என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தது. நரியின் புத்திசாலித்தனமான பதிலை கேட்ட சிங்கம் அதை விட்டுவிட்டது. ஆபத்தான சூழ்நிலையை நன்கு உணர்ந்து, சரியான முறையில் பதிலளித்ததால் நரி தனது உயிரை காப்பாற்றிக் கொண்டது.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்பிக்கிறது. எந்த நேரத்தில், எந்த நபரிடம், எதைப் பேசுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரே வார்த்தை வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கக் கூடும். இன்று நல்ல பொருளில் புரிந்துகொள்ளப்படும் ஒரு சொல், நாளை வேறொரு சூழ்நிலையில் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
எனவே நாம் பேசுவது என்ன என்பதைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல், யாரிடம் பேசுகிறோம், எந்த சூழ்நிலையில் பேசுகிறோம் என்பதையும் கவனமாக ஆராய வேண்டும். நம் முன்னோர்கள், “ஒரு சொல் கொல்லும், இன்னொரு சொல் வெல்லும்” என்று சொல்லியிருக்கிறார்கள். அதோடு, “ஆழம் தெரியாமல் காலை விடாதே” என்றும் எச்சரித்துள்ளனர். சூழ்நிலையை அறியாமல் வார்த்தைகளை வெளிப்படுத்துவது பல நேரங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இதே ஞானத்தை நாம் காண முடிகிறது. உண்மையான மனதுடன் வந்தவர் களுக்கு அவர் தெளிவான பதில்களை அளித்தார். சிலரிடம் அவர் அமைதியாக இருந்தார். இன்னும் சிலருக்கு, அவர்களிடமிருந்தே பதிலை வெளிப்படுத்தச் செய்தார். சில சமயங்களில் கேள்விக்கே கேள்வியால் பதிலளித்து, கேட்பவரையே சிந்திக்க வைத்தார். இதன் மூலம், எந்த சூழ்நிலையில் எப்படி பேச வேண்டும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணத்தை அவர் நமக்குக் காட்டியுள்ளார்.
ஆகையால், எல்லா இடங்களிலும் பேச வேண்டியதில்லை. எல்லோரிடமும் பேச வேண்டியதில்லை. சரியான நேரத்திலும், சரியான நபரிடமும், சரியான வார்த்தையைப் பேசும் ஞானத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இறைவேதம் இதனை வலியுறுத்துகிறது: “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும், புறாக்களைப்போலக் கபடமற்றவர்களு மாய் இருங்கள். மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (மத்தேயு 10:16,17).
இந்த வசனங்கள் நம் இதயத்தில் ஆழமாக பதிய வேண்டும். வெளியில் காணப்படும் எல்லாமே உண்மையல்ல. எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எனவே எவரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து பேசுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மதிப்புள்ள வார்த்தைகள் முத்துக்களைப் போன்றவை. அவற்றை யாரிடமும் எளிதாகச் சிதறவிடக் கூடாது. ஞானத்தோடும், நிதானத்தோடும், சூழ்நிலையை உணர்ந்து பேசுவோம். அப்பொழுது நம்முடைய வார்த்தைகள் நம்மை பாதுகாப்பதோடு, மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்