பரமக்குடியை சேர்ந்த எபிரேய பண்டிதர் ஜுப்ளின் ஜோசப் அவர்களின் மூத்த சகோதரர் பிலிப் ஜோசப். இவரைப் பற்றிய ஓர் உண்மை சம்பவத்தை ஜுப்ளின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். 1990 ம் ஆண்டு பிலிப் ஜோசப் கத்தார் எனும் அரபு தேசத்தில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள் தன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு காவல்துறை அதிகாரி வழிமறித்தார். காரின் முன் சீட்டில் வைத்திருந்த பைபிளை பார்த்து “இது என்ன?” எனக் கேட்டார்.
பிலிப் “இது கடவுளின் வார்த்தைகள் அடங்கிய பைபிள்” என்றார். அந்த அதிகாரி வாக்குவாதம் செய்து பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டார். போலியான குற்றசாட்டால் பிலிப் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கத்தார் மன்னர் பிலிப்பை நாடு கடத்த உத்தரவிட்டார்.
அதிகாரிகள் பிலிப்பை தன் மேல்சட்டையை கூட அணிய விடாமல் அவமானப்படுத்தி விமானத்தில் ஏற்றி நாடு கடத்தினர். அவர் குடும்பத்தினர் யாவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தோட, பிலிப் தன் ஆண்டவருக்காக எல்லா நிந்தையையும் சகித்து பொறுமையாக விமானத்தில் ஏறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று ஓர் பணி தேடி அங்கே வசித்து வந்தார். அங்கேயும் ஓய்வு நேரங்களில் ஆண்டவரைப் பற்றிய கைப்பிரதிகளை விநியோகித்து நற்செய்திப் பணி செய்து வந்தார்.
ஒரு நாள் மெட்ரோ ரெயிலில் ஓர் நடுத்தர வயது பெண்மணி கவலையாக அழுது கொண்டிருந்ததைப் பார்த்தவர் அந்த பெண்மணியிடம் சென்று கைப்பிரதி கொடுத்து ஆறுதலாக பேசினார். லில்லி எனும் அந்த பெண்மணி தன் கணவர் தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்யப்போவதாகவும் தன் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தான் மிகவும் கலங்குவதாகவும் தெரிவித்தார். பிலிப் அவருக்கு ஆறுதல் கூறி அவருக்காக ஜெபித்து தன் முகவரியையும் கூறி சென்றார்.
சுமார் ஒரு மாதம் கழித்து அதே பெண்மணி போனில் தொடர்பு கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிலிப் என் கணவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார், அதுமட்டுமல்ல இங்குள்ள அமெரிக்க அலுவலகத்திலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு பணிமாறுதல் கிடைத்து விட்டதாகவும் குடும்பத்துடன் அங்கே செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.
இப்போது ஆண்டவர் தன்பிள்ளையான பிலிப்பிற்காக எண்ணமுடியாத ஓர் பெரிய காரியத்தை செய்ய ஆரம்பிக்கிறார். அந்த பெண்மணி லில்லி அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியில் சேர்ந்த அதே மாதம் அன்றைய அதிபர் ஜார்ஜ் புஸ்ஸிடம் அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் தெரிவித்து பிலிப்புக்கு நடந்த நிந்தையையும் தெரிவிக்கிறார். அதே நேரம் புஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேஜையில் கத்தார் நாட்டிற்கான அமெரிக்காவின் போர் ஆயுத உதவிகளுக்கான 10 பேர் கொண்ட ஆய்வுக்குழுவின் ஆவணம் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த புஷ் லில்லியிடம் “அவன் பெயர் என்ன சொன்னாய்?” எனக்கேட்டுக் கொண்டே அந்த குழுவின் தலைவராக பிலிப் ஜோசப் என்பரை அனுப்புங்கள் என வலது கையால் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் (இடது கை பழக்கமுள்ளவர்) எழுதினார்.
இதற்கு அடுத்த மாதத்தில் எந்த கத்தார் விமான நிலையத்தில் மேல்சட்டையை கூட அணிய விடாமல் நாடு கடத்தப்பட்டாரோ அதே விமான நிலையத்தில் சிவப்புக்கம்பள விரிப்புடன் குழு தலைவரான பிலிப்பை வரவேற்க கத்தார் மன்னர் நின்று கொண்டிருந்தார். அப்போது மன்னர் அருகிலிருந்த மெய் காப்பாளன் அவர் காதில் ஏதோ முணுமுணுத்தான். மன்னர் முகம் மாறியது. நாம் நாட்டை விரட்டிய நபரை வரவேற்கவா பூங்கொத்தோடு வந்திருக்கிறேன்’ என அதிர்ச்சி அடைந்தார்.
வரவேற்பு முடிந்து ஆய்வு கூட்டம் ஆரம்பித்தது. மன்னர் இருக்கைக்கு அருகே அமர வைக்கப்பட்டார் பிலிப். கூட்டத்தில் மன்னர் பிலிப்பிடம் காதருகே குனிந்து ஏதோ சொல்கிறார். பிலிப் தன் மொழி பெயர்ப்பாளரை பார்க்க, மொழி பெயர்ப்பாளர் சொல்கிறார், ‘தயவு பண்ணி எம் நாட்டிற்கு உதவிகளை வழங்குங்கள்’ என கெஞ்சி கேட்கிறார் என்றார். பிலிப் அவர்கள் செய்த சித்திரவதைகளையெல்லாம் மறந்து முழு உதவிகளையும் செய்ய அமெரிக்காவுக்கு பரிந்துரை செய்தார்.
மன்னர், பிலிப்பின் இருகரங்களையும் பற்றியவாறு மன நெகிழ்வுடன் “கிறிஸ்தவர்கள் தீமைக்குப் பதிலாக நன்மை செய்கிறவர்கள் என இன்று அறிந்து கொண்டேன்” என்றார்.
“ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்றயாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்”. (1 தெச.5:15) என்ற வேத வசனத்தின்படி எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்