இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த முதல் செயல், தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் மன்னித்ததாகும். இயேசு ஏன் நம்மை மன்னிக்கிறார்? அதற்கு ஒரே காரணம் அவர் நம்மில் வைத்த அன்பு ஒன்றே பிரதானமானதாகும்.
தவறு செய்யும் தன் பிள்ளையை தகப்பன் கொன்று போடுவதில்லை. ஏனென்றால், அது அவனுடைய பிள்ளை. ஆகையால் அவன் அந்த பிள்ளையை மன்னித்து திருத்து கிறான். அதே வண்ணம், இயேசுவும் சிலுவையில் அதையே செய்தார். அன்று இயேசு சிலுவையில் வெளிப்படுத்திய மன்னிப்பை இன்று நாம் பிறருக்கு வெளிப்படுத்த கடமைப் பட்டுள்ளோம்.
“தவறு செய்வது மனித இயல்பு என்றால், மன்னிப்பது இறை இயல்பாகும்” தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக் கின்றோமா? அல்லது பிறர் செய்த தவறைத்தான் மன்னித்திரு க்கின்றோமா? இதுதான் இன்றைய சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும்.
தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்ப தில்லை. மன்னிப்பு கேட்க யோசிக்கிறார்கள். காரணம், நான் பிரச்சனைக்கு காரணம் இல்லையே, பிரச்சனையை நான் ஆரம்பிக்கவில்லையே, அதனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். வேண்டுமானால் பிரச்சனையை ஆரம்பித்த அவன்(ள்) என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் என்ற ஈகோ மனம் படைத்த வர்களாய் இருப்பதே.
பிரச்சனையை யார் ஆரம்பித்தால் என்ன? கணவன், மனைவி, தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன் என உறவுகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அவர்களிடையே இருக்கும் உறவு உண்மையானதாய் இருந்தால், அந்த உறவை அவர்கள் மதிக்கிறார்கள் எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தயங்கமாட்டார்கள். அந்த உறவு மீண்டும் நீடிக்கும்.
ஆனால், ஒரு சிலர் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்யத் துணிவார்கள், செய்வார்கள். இதனால் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கை உடைக்கப்படுகிறது. உறவும் பாதிக்கப்படுகிறது.
மன்னிப்பு என்பது உறவில் ஏற்பட்ட விரிசலை இணைக்கும் பாலமாக அமைகிறது. அதே நேரத்தில் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. மன்னிப்புக் கேட்பதன் வழியாகவும், மன்னிப்பதன் வழியாகவும் அவர்களிடையே இருக்கும் பிரச்சனை கலந்தாலோசிக்கப்பட்டு தீர்க்கப்படுகிறது. மன்னிப்புக் கேட்காமல் மன்னிக்காமல் இருப்பதால் அந்தப் பிரச்சனை மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்வில் பெரியத் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.
“பிரச்சனை என்பது உறவு வாயிலைப் பூட்டும் சாவி, மன்னிப்பு என்பது பிரச்சனையால் பூட்டப்பட்ட உறவு வாயிலைத் திறக்கும் சாவியாகும்”.
ஒருமுறை சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது, நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமம்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே! அது எப்படி? என்று. அதற்கு சாவி சொன்னது, நீ என்னைவிட பலசாலிதான். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். பூட்டைதிறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம்.
ஒருவன் செய்த தவறுக்காக அவனை பழிவாங்குவதனாலோ, தண்டிக்கப்படுவதாலோ அந்தத் தவறிலிருந்து அவனை திருத்த இயலாது. மன்னிப்பு என்ற ஒன்று மட்டுமே அவன் உள்ள உணர்வைத் தூண்டி அந்தத் தவறிலிருந்து திருந்தி வாழ வைக்கும். எனவே அன்பு என்ற செடியிலிருந்து மன்னிப்பு என்ற வாசனை பூ பூப்பதாக. ஆமென்.
– போதகர். பெ. பெவிஸ்டன்