சுமார் நூற்றாண்டுக்கு முன்பு, ஒரு அருட்பணியாளர் தென் தமிழ்நாட்டிற்கு நற்செய்தி பணிக்காக வந்தார். அவர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலையை நெருக்கமாகக் கண்டபோது, குறிப்பாக பெண்களின் நிலைமை அவரை மிகவும் வருத்தமடையச் செய்தது. அந்த காலத்தில் பெண்களுக்கு கல்வி என்பது அரிதான ஒன்று. பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காரணமாக, பெண்கள் கல்வி பெறுவது பல இடங்களில் மறுக்கப்பட்டது.
இந்த நிலையைப் பார்த்த அவர், தன் நாட்டில் இருந்த தனது இளம் சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “இங்குள்ள பெண்கள் கல்வி கற்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மிகவும் பரிதாபமானது” என்று மனவேதனையுடன் விவரித்தார். அந்தக் கடிதத்தை வாசித்த சிறுமி சாராள் டக்கர். அவள் வயது வெறும் பதினான்கு தான். மேலும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவளாக இருந்தாள். ஆனாலும் அவளுடைய இதயம் கருணையால் நிரம்பியிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்தவுடன் அவள் மிகவும் வருந்தினாள். “என்னால் நேரில் சென்று உதவ முடியவில்லை” என்ற துயரம் அவளுள் பெருகியது.
ஆனால் அந்த வருத்தம் அவளை சும்மா இருக்க விடவில்லை. “நான் ஏதாவது செய்ய வேண்டும்” என்ற எண்ணம் அவளுள் உருவானது. உடனே தனது பெற்றோர் எதிர்காலத்திற்காக வைத்திருந்த நகைகளை தியாகமாக வழங்க முடிவு செய்தாள். அதோடு மட்டுமல்லாமல், தனது நண்பிகளிடமும் உதவி கேட்டு தொகை சேகரித்தாள். இவ்வாறு ஒரு பெரிய தொகையை திரட்டி, இந்தியாவில் இருந்த தனது சகோதரருக்கு அனுப்பி வைத்தாள்.
அந்த பணத்தைப் பயன்படுத்தி, “பெண் குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளியும், ஆசிரியர் பயிற்சி அளிக்கும் நிலையமும் தொடங்கப்பட வேண்டும்” என்று அவள் விரும்பினாள்.
அந்தச் சிறுமியின் இந்தச் சிறிய முயற்சி ஒரு விதையாக மாறியது. அந்த விதை காலப்போக்கில் ஒரு பெரிய மரமாக வளர்ந்தது. அந்த உதவியால் தொடங்கப் பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றின. கல்வி இல்லாமல் இருளில் வாழ்ந்த பெண்கள், அறிவின் ஒளியால் உயர்ந்த நிலையை அடைந்தனர்.
அதில் மிகவும் ஆச்சரியமான உண்மை என்னவென் றால், இந்தப் பெரும் மாற்றத்திற்கு காரணமான சாராள் டக்கர் தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆயினும், தூரத்தில் இருந்தபடியே தனது அன்பும் தியாகமும் மூலம் எண்ணற்ற வாழ்க்கைகளில் ஒளி ஏற்றினார்.
இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உண்மை யை கற்றுக்கொடுக்கிறது. ஒருவரின் உடல் அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை; அவருடைய இதயம் அருகில் இருந்தாலே போதும். சாராள் டக்கர் வயதில் சிறியவளாக இருந்தாலும், சிந்தனையில் பெரியவளாக இருந்தாள். செல்வம் அதிகமாக இல்லாவிட்டாலும், அன்பில் செல்வந்தையாக இருந்தாள்.
அவள் செய்தது ஒரு சிறிய செயல் போல தோன்றி னாலும், அதன் விளைவு தலைமுறைகளைத் தொட்டது. அன்பானவர்களே, உலகில் இன்னும் பலர் இருளில் வாழ்கிறார்கள். வறுமை, கல்வியின்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் ஒளி ஏற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்த ஒளி பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறிய தீபம் கூட இருளை அகற்றும்.
இறைவேதம் கூறுகிறது:
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்”
(மத்தேயு 5:14).
எனவே, வயது, சூழ்நிலை, உடல்நிலை போன்றவற் றை காரணமாக காட்டாமல், நம்மால் முடிந்த அளவு நன்மை செய்ய வேண்டும். ஒரே ஒரு நல்ல செயலும் ஒரு வாழ்க்கை யை மாற்றக்கூடும்.
நாம் அனைவரும் நம் உள்ளத்தில் கருணையின் தீபத்தை ஏற்றி, அன்பின் ஒளியை உலகத்தில் பரப்புவோம். நாமும் ஒரு தீபமாக இருப்போம், உலகம் ஒளிரட்டும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்