இந்த உலகில் நடைபெறும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து, “கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கில்லை” என்று விமல் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தான். “நாள்தோறும் ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் அநியாயத்திற்கு ஆளாகிறார்கள்; நியாயத்திற்கும் நீதிக்கும் இடமே இல்லை” என்று அவன் தன் கருத்தை வெளிப்படுத்துவான்.
விமல் ஒரு சாதாரண மனிதன் அல்ல. அவன் மிகுந்த கல்வியறிவும் செல்வமும் உடையவன். அதனால் அவன் பேசும் தத்துவக் கருத்துக்கள் பலரையும் கவர்ந்தன. அவன் சொல்வதை உண்மையாகவே எண்ணி ஏற்றுக்கொண்ட வர்களும் அந்த ஊரில் இருந்தனர்.
ஒருநாள், அந்த ஊரில் ஒரு நூலகத்தை அமைப்பதற் காக முக்கியமானவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்தச் சந்திப்பில் வயோதிபமான ஒரு போதகரும் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், வழக்கம் போல விமல் மீண்டும் கடவுளுக்கு எதிராக பேசத் தொடங்கினான். “இந்த உலகத்தில் இவ்வளவு அநியாயங்கள் நடக்கும்போது, கடவுள் இருக்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்?” என்று வாதிட்டான். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த வயதான போதகர் அமைதியாக எழுந்து, விமலை நோக்கி பேசத் தொடங்கினார்:
“திரு. விமல் அவர்களே, ஏழைகள் கஷ்டப்படுவதற்கும், எளியவர்கள் ஒடுக்கப்படுவதற்கும் கடவுள் என்ன செய்தார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள். கடந்த வருடம் உங்கள் இரண்டாவது மகன், மது அருந்திய நிலையில் சாலை விதிகளை மீறி, மோட்டார் வண்டியை அதிவேகமாக ஓட்டிச் சென்றதை மறந்துவிட்டீர்களா?” கூட்டம் முழுவதும் அமைதியாகியது.
போதகர் தொடர்ந்தார்: “அந்த விபத்தில், வழியோரம் நடந்துச் சென்ற ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டார்கள். ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இன்னொருவன் இன்றுவரை கை கால் முறிந்து படுக்கையில் கிடக்கிறான். இரண்டு வயது குழந்தை ஒன்று தலைக்காயம் அடைந்து, மூளை பாதிக்கப்பட்டதால் இன்று மனநலக் காப்பகத்தில் வளர்ந்து வருகிறது. இன்னொருவர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார்.”
பின்னர் அவர் நேராக விமலை நோக்கி கேட்டார்: “இந்த விபரீதத்திற்கு யார் காரணம்? பரலோகத்தில் இருக்கும் தேவனா? நாட்டின் சட்டமா? அல்லது அந்த சட்டத்தை மீறிய உங்கள் மகனா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா?” இந்தக் கேள்விகள் விமலின் மனதை உலுக்கியது. பலர் முன்னிலையில் அவன் மௌனமாக நின்றான். அவனுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்போது அந்த வயோதிப போதகர் மெதுவாகத் தொடர்ந்து பேசினார்: “விமல் சார், நான் உங்களை அவமதிக்க விரும்பவில்லை. மனித குலத்தின் அவல நிலைக்கு யார் காரணம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். நாம் செய்வதற்கான விளைவுகளை கடவுளின் மேல் சுமத்துவது நியாயமல்ல.” அந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரின் இதயத்தையும் தொட்ந்தன. விமலும் தனது தவறான எண்ணங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.
இறைமக்களே, இறைவேதம் இவ்வாறு கூறுகிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரு மல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப் படுகிறான்” (யாக்கோபு 1:13,14).
நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கும், உலகில் நடைபெறும் அநியாயங்களுக்கும் காரணம் பெரும்பாலும் மனிதனின் தவறான முடிவுகளும் சுயநல ஆசைகளும் தான். ஆகையால், கடவுளை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, நம்மையும் நம் செயல்களையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையையும், நம் சமூகத்தையும் நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். நீதியும் அன்பும் நிறைந்த உலகத்தை உருவாக்குவது தேவனின் பொறுப்பு மட்டுமல்ல; அது நம்முடைய பொறுப்பும் ஆகும். எனவே, குற்றம் சாட்டாமல் மாற்றத்தை ஆரம்பிப்போம். நம்மில் இருந்து நல்லதை வளர்த்தால், உலகமும் நன்றாக மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்