ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு போதகர், தம்முடைய பணிவும் புன்முறுவலும் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருநாள், அவரை சந்திக்க வந்த ஒரு பெண்மணி, வெளிப்படையாக எதையும் மறைக்காத தன்மையுடன், “ஐயா, நீங்கள் கட்டியிருக்கும் டை கொஞ்சம் நீளமாக இருக்கிறது” என்று சொன்னாள். அந்தச் சொல்லில் ஒரு எளிமை இருந்தாலும், அதில் ஓர் அளவிலா தன்னிச்சையும் கலந்து இருந்தது.
போதகர் சிரித்தபடி, “அப்படியா? என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவள், “அதை வெட்டிவிட வேண்டும்” என்று உடனே பதிலளித்தாள். அவர் அதை ஒரு சாதாரண நகைச்சுவை என்று எண்ணி, “சரி, வெட்டுங்கள்” என்று சொல்லிவிட்டார். ஆனால் அடுத்த நொடியில் எதிர்பாராத ஒன்று நடந்தது. அந்த பெண்மணி உண்மையிலேயே கத்தரிக்கோலை எடுத்து, டையின் நீளமான பகுதியை வெட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
சற்றுநேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த போதகர், பின்னர் அவளை அழைத்து, மெதுவாகக் கூறினார்: “உன்னிடம் நான் ஒன்றைக் கூற வேண்டும். உனக்கு நாக்கு கொஞ்சம் நீளமாக இருக்கிறது.” அவள் அதிர்ந்து, “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள். உடனே அவர் கத்தரிக் கோலைக் காட்டி, “அதையும் வெட்ட வேண்டும்” என்றார். அந்தச் சொல்லின் கூர்மை, கத்தரிக்கோலின் கூர்மையைவிட அதிகமாக அவள் இதயத்தைத் தட்டியது.
அந்தப் பெண்மணி பயந்து அங்கிருந்து விலகினாள். ஆனால் அவளது மனதில் ஒரு ஆழ்ந்த உண்மை பதிந்தது. நாவால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள், கத்தரிக்கோலைவிட ஆழமாக காயப்படுத்தக்கூடியவை. ஆகையால், மனிதன் தன் நாவைக் காக்க வேண்டும்; சொல்லும் சொற்களில் சிந்தனை இருக்க வேண்டும். அளவில்லாத வார்த்தை, அளவில்லாத காயத்தை உண்டாக்கும்; ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட நாவு, குணமாக்கும் சக்தியைக் கொண்டது.
இறைமக்களே, நம் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவோ அழிக்கவோ செய்யும் வல்லமை நமது நாவிலே இருக்கிறது. “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதி. 18:21) என இறைவேதம் கூறுகிறது. ஆகையால், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிந்தித்துப் பேசப்படவேண்டும்.
மேலும், “இனிய பதில் கோபத்தை அடக்குகிறது; கடினமான வார்த்தை கோபத்தை எழுப்புகிறது” (நீதி. 15:1) என்ற வசனம் நமக்கு எச்சரிப்பு பலகையாக உள்ளது. எனவே, நம் நாவை கிருபையிலும் ஞானத்திலும் நடத்தி, தேவனுக்குப் பிரியமான வார்த்தைகளைப் பேசுவோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்